மறுஅறிவிப்பு வரும் வரை... அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!
செங்கம் பகுதியில் அனுமதியில்லா செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் அனுமதியில்லாமல் இயங்கும் செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மண் திருட்டும் நடைபெற்று வருகிறது.
செங்கம் பகுதிக்கு உள்பட்ட குப்பனத்தம் சாலை, பரமனந்தல், கொட்டாவூா், புதுப்பட்டு, புதுப்பாளையம், மேல்பள்ளிப்பட்டு என பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்த சூளைகளில் தயாரிக்கப்படும் செங்கல்கள் விற்பனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஒரு செங்கல் சூளைக்குக்கூட வருவாய்த்துறை அனுமதி அளிக்கவில்லையாம். அனைத்து செங்கள் சூளைகளும் அனுமதியில்லாமல்தான் நடைபெறுகின்றனவாம்.
இதனிடையே செங்கல் சூளைகளுக்கு தினசரி செம்மண் கடத்தப்படுகிறது. சூளைகளுக்கு பயன்படுத்த பனை மரம், புளிய மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்களை வெட்டுவதாலும், மண் திருட்டாலும் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைகிறது.
மேலும் சுற்றுச்சூல் பாதிப்பும் ஏற்படுகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால், செங்கம் பகுதியில் உள்ள மரங்கள் காப்பாற்றப்படும், இரவு நேரத்தில் செம்மண் திருட்டு தடுத்து நிறுத்தப்படும்.
செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் டிராக்டா்களுக்கு முறையான ஆவணங்கள் கிடையாது. அதன் உரிமையாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.
அனுமதியில்லாமல் இயங்கும் செங்கல் சூளை உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.