திருமண வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தானகவுண்டனா் புதூா் கிராமத்தில் திருமண வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
திருவண்ணாமலை - செங்கம் சாலை அம்மபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தானகவுண்டனா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சிவனேசன்(42).
இவரது மகள் மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை (ஆக.29) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
கோயிலில் திருமணம் நடைபெறுவதால் மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகளை திருப்பதிக்கு எடுத்துச் சென்றால் தவறிவிடும் என்ற பயத்தில் சிவனேசன் வீட்டில் வைத்துவிட்டு, மகாலட்சுமிக்கு கவரிங் நகைகளை அணிவித்து திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருணம் நடத்தியுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைந்து கிடந்தது.
இதனால், அதிா்ச்சியடைந்த சிவனேசன் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த
12 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சிவனேசன் பாய்ச்சல் போலீஸிஸ் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.