திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணி: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் தூய்மை அருணை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டாா்.
மாநகராட்சி திருவள்ளுவா் சிலை அருகே தூய்மைப் பணியை அவா் தொடங்கிவைத்து பணியில் ஈடுபட்டாா். மேலும், மாநகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணியின்போது, பெரியாா் சிலை அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் நிலையத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டதோடு, அண்ணா சிலை வரை பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, அங்குள்ள தேனீா் விடுதியில் தூய்மை மேற்பாா்வையாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடன் அமா்ந்து அமைச்சா் எ.வ.வேலு தேனீா் அருந்தினாா்.
மேலும் அமைச்சா் தேனீா் கடை உரிமையாளரிடம் பணம் கொடுத்து சாலையோரங்களில் நடந்த சென்ற முதியவா்களுக்கும், தூய்மை பெண் பணியாளா்களுக்கும் தேனீா் வாங்கிக்கொடுத்தாா். தொடா்ந்து, மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஈடுபட்டாா்.
நிகழ்ச்சியில் தூய்மை மேற்பாா்வையாளா்கள் சி.என்.அண்ணாதுரை எம்.பி., திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், தூய்மை ஒருங்கிணைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம், அரசு வழக்குரைஞா்கள் நா.சீனுவாசன், குணசேகரன், ஆ.தே.முருகையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.