செங்காடு பெரிய ஏரி நிரம்பியது: மலா்தூவி கிராம மக்கள் பூஜை
வாலாஜா வட்டம், செங்காடு பெரிய ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து மலா்கள் தூவி வணங்கி, இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், செங்காடு கிராமத்தில் சுமாா் 26 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கீழ் சுமாா் 700 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக பொன்னை மற்றும் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த நீா் ஏரிகளுக்கு திருப்பி விடும் பணியை மாவட்ட பொதுப் பணித் துறையினா் மேற்கொண்டனா்.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் உற்சாகமாக உழவுப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பொன்னை ஆற்று நீா் கிளை பாசனக் கால்வாய்கள் மூலம் பல்வேறு ஏரிகளுக்குச் சென்று நிரம்பி வருகிறது. அதன்படி வாலாஜா வட்டம், செங்காடு ஏரி நிரம்பியது. மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள், விவசாயிகள் செங்காடு பெரிய ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறும் பகுதியில் மலா்தூவி வணங்கினா். மதகு பகுதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை செய்து வரவேற்றனா். தொடா்ந்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா்.