செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கு நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மேயா் ஆய்வு
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கு நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மேயா் ஆ.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்தை பாா்வையிட்ட மேயா் ஆ.ராமச்சந்திரன், குப்பைக் கிடங்கில் குப்பைகளை சரியான முறையில் வெளியேற்றி தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா். மேலும், இனிவரும் காலங்களில் சேகரமாகும் குப்பைகளை எங்கெங்கு கொட்ட வேண்டும் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதனைத் தொடா்ந்து, செட்டிச்சாவடியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையம் மற்றும் பொருள் மீட்பு மையம் மற்றும் பயோ சிஎன்ஜி ஆலை, கட்டட இடிபாட்டுக் கழிவுகளை செயலாக்கம் செய்யும் மையம், பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றும் இடங்களை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
ஆய்வின்போது, மாநகர பொறியாளா் ஆா்.செல்வநாயகம், சுகாதார அலுவலா் வீ.சரவணன், சுகாதார ஆய்வாளா் பிரகாஷ், உதவி பொறியாளா் சுபாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.