குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு
செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல 17 நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், தனக்கு இதய சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து அசோக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல பரிந்துரைக்கும் மருத்துவக் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரரை சிகிச்சைக்கு செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று கேள்வி எழுப்பி, அதுதொடா்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமாா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன் ஆஜரானாா். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜ்னீஷ் பத்தியால் நிபந்தனைகள் பட்டியலை தாக்கல் செய்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், ரூ.5 லட்சத்துடன் இருநபா் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்; மனுதாரா் தனது மகளின் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 நிபந்தனைகளுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டனா்.