Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி...
சென்னை: அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் நகை திருட்டு; சிசிடிவி-யால் சிக்கிய பெண்!
சென்னை சேத்துப்பட்டு, மங்களபுரம் பகுதியில் குடியிருந்து வருபவர் சுகந்தி. இவரின் அம்மா ஷீலா. இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் அம்மா ஷீலாவை உடனிருந்து சுகந்தி கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10.5.2025-ம் தேதி இரவு சுகந்தி உணவு வாங்க வெளியில் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் எடையுள்ள தங்க குண்டு மணிகள், தாலியைக் காணவில்லை. அதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சுகந்தி விசாரித்தார். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுகந்தி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் மயக்கநிலையிலிருந்த ஷீலாவின் கழுத்திலிருந்து தங்க நகைகளை திருடும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸார் அந்தப் பெண் குறித்த தகவல்களை சேகரித்தனர். அப்போது அவரின் பெயர் அன்னபாக்கியம் என்றும் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அன்னபாக்கியத்தைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு உதவி செய்த வந்த தகவல் தெரியவந்தது. அதனால் மருத்துவமனையில் தங்கியிருந்த அன்னபாக்கியம், நோயாளி ஷீலா அணிந்திருந்த தங்க நகைகளை திருட முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஷீலாவிடமிருந்து தங்க நகைகளைத் திருடிய அன்னபாக்கியம் அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால் சிசிடிவியால் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார். விசாரணைக்குப் பிறகு அன்னபாக்கியத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.