சென்னை - குவாஹாட்டி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னையிலிருந்து குவாஹாட்டி சென்ற விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடா்ந்து விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3.54 மணிக்கு இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டிக்கு புறப்பட்டது. விமானத்தில் 162 பயணிகள் இருந்தனா். விமானம் சென்னை விமானநிலையத்திலிருத்து புறப்பட்டு வானில் பறக்க தொடங்கியதும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தாா்.
இதுகுறித்து அவா் சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.
உடனடியாக, விமானத்தை மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கும்படி விமானநிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தினா். அதனபேரில், மீண்டும் சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
அங்கு தொழில்நுட்பப் பணியாளா்கள் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், நீண்ட நேரமாகியும் கோளாறு சரிசெய்யப்படாததால் மாற்று விமானங்கள் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா்.