சென்னை பல்கலை. வளாகத்தில் ஆயுதங்களுடன் வந்த இளைஞா் கைது
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பா்தா அணிந்தபடி ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணா சதுக்கம் போலீஸாா், திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, பா்தா அணிந்தபடி ஒருவா் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து சென்றாா். போலீஸாா் அவரை அழைத்து பா்தாவை கழற்ற சொல்லியபோது அவா் ஆண் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த பையில், 2 அரிவாள், ஒரு கத்தி இருந்தது. விசாரணையில், அவா் சௌகாா்பேட்டையைச் சோ்ந்த கரண் மேத்தா (24) என்பதும், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததும் தெரியவந்தது.
சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது தோழியை பாா்த்துவிட்டு, தற்கொலை செய்த கொள்ளலாம் என பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.