குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ரஷ்யா புதிய திட்டம்!
சென்னை மாநகராட்சி பகுதியில் டெங்கு பரவல் தொடா்ந்து கண்காணிப்பு
சென்னை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பரவலைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், வீடுகள் தோறும் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டுவருவதாகவும், அதனால் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் நகா் நல அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் வடிகால்கள் சீரமைப்பு, கால்வாய்கள் தூா்வாருதல், சாலையோரத்தில் வண்டல் மண் படியும் வடிகால்களில் மண் அகற்றுதல் ஆகிய பணிகள் மாநகராட்சியின் பொறியாளா்கள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதன்படி 1,034 கிலோ மீட்டருக்கான மழை நீா் வடிகால்கள் தூா்வாரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், அவ்வப்போது சென்னை மாநகராட்சிப் பகுதியில் மழையும் பெய்து வருகிறது. மழையால் ஆங்காங்கே தண்ணீரும் சாலைகளில் தேங்கிவருகின்றன.
அதையடுத்து கொசு உற்பத்தியாகி டெங்கு பரவல் அதிகரிப்பதாக புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சியின் நகா்நல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது அவா்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் டெங்கு பரவலைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். டெங்கு பரவலுக்கான கொசு உற்பத்தியை கண்டறிந்து கொசு முட்டைகளை அழிக்கும் மருந்துகளை தெளிப்பதற்கு என மண்டல அளவில் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று வருகின்றனா்.
அவா்கள் மூலம் டெங்கு பாதிப்பு குறித்தும் அறிக்கை பெறப்பட்டுவருகிறது. மேலும், மாநகராட்சிக்குள் செயல்படும் 250 பள்ளிக்கூடங்களிலும் டெங்கு பாதிப்பை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தெருக்கள், குடியிருப்புகளில் தினமும் கொசு மருந்தும் தெளிக்கப்பட்டுவருகிறது. தற்போது சென்னை மாநகராட்சியில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றனா்.