`தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது’ - ஆளுநர் மாளிகை ட்விட்டர் ப...
சென்னையில் அதி கனமழை பெய்யுமா? எங்கெல்லாம் பயணத்தை தவிர்க்க வேண்டும்?
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது, புதன்கிழமை (டிச.11) மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை - தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மெதுவாக நகரும்.
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 6.30 மணி நிலவரத்தை பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றுமுதல் மழை தொடங்கும். இந்த புயல் சின்னத்தால் தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு மழை பெய்யும்.
பிரதானமாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். தொடர்ந்து பிற பகுதிகளிலும் பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு இலங்கையிலிருந்து மன்னார் வளைகுடா, தென் தமிழகம் வழியே கேரளத்தை சென்றடையும். உள்தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பகலில் தொடங்கி மாலை, இரவில் தீவிரமடையும். இன்றும் நாளையும் சென்னையில் கனமழை பெய்யும். அதிகனமழைக்கு வாய்ப்பில்லை. புதுவை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
டெல்டா
காற்றழுத்த தாழ்வு நகரும்போது, டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். இந்த புயல் சின்னத்துக்கு டெல்டா மாவட்டங்கள்தான் ஹாட்ஸ்பாட்.
இதையும் படிக்க : சென்னை, 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரம் மழைக்கு வாய்ப்பு!
கொடைக்கானல், குன்னூர்
அடுத்த மூன்று நாள்களுக்கு கண்டிப்பாக கொடைக்கானல் மற்றும் குன்னூருக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். தமிழகம் வழியே கேரளத்தில் உள்ள அரபிக் கடலை புயல் சின்னம் அடையும்போது இந்த பகுதிகளின் பள்ளத்தாக்குகளில் தீவிர மழை பெய்யும்.
உள்தமிழகம் மற்றும் மேற்கு தமிழகம்
ஒட்டுமொத்த உள் தமிழக மாவட்டங்கள், கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்யும். சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு. இங்குள்ள மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதிகளில் ஒருநாளாவது நல்ல மழை பெய்யும்.
மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் தமிழகத்தில் இரண்டு, மூன்று நாள்களுக்கு நல்ல மழை பெய்யும். தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரியில் மிதமான மழை பெய்யும்.
புயலுக்கான வாய்ப்பு இல்லை. டெல்டா, மேற்கு மலைப்பகுதிகள் மழைக்கான ஹாட்ஸ்பாட்” எனக் குறிப்பிட்டுள்ளார்.