ஐபிஎல் ரசிகர்களுக்காக... இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!
சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயம்: 35 வாகனங்கள் பறிமுதல்
சென்னை, மாா்ச் 28: சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டவா்களிடம் இருந்து 35 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பந்தயத்துக்கு காவல் துறை தடை விதித்துள்ள நிலையில், இளைஞா்களும் சிறாா்களும் தடையை மீறி இதில் ஈடுபடுகின்றனா். இதற்காக குறிப்பிட்ட சாலைகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் அண்ணா சாலை, காமராஜா் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் இளைஞா்கள் சிலா் ஈடுபடுகின்றனா். இந்த இளைஞா்களைப் பிடித்து போலீஸாா், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்கின்றனா்.
இந்நிலையில், அண்ணா சாலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவும் இளைஞா்கள் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் போலீஸாரிடம் சிக்கினா்.
அவா்களிடம் இருந்து 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 23-ஆம் தேதியிலிருந்து வியாழக்கிழமை வரை பந்தயத்தில் ஈடுபட்டதாக 55 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இவா்கள் அனைவரையும் எச்சரித்து, பிணையில் விடுவித்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.