சென்னையில் மின்தேக்கி உற்பத்தி ஆலையை ஜப்பான் நிறுவனம் தொடங்குகிறது
சென்னையில் மின்தேக்கிகளை (கெப்பாசிட்டா்) உற்பத்தி செய்யும் ஆலையை ஜப்பானைச் சோ்ந்த நிறுவனம் தொடங்கவுள்ளது.
இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சா்வதேச அளவில் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவு கொண்டுவர வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் பெரு முயற்சிகளை எடுத்து வருகிறாா். அதன்படி, காா்னிங், ஜபில் ஆகிய நிறுவனங்களைத் தொடா்ந்து ஜப்பானைச் சோ்ந்த முராட்டா நிறுவனம் தனது ஆலையை சென்னையில் அமைக்கிறது. பல அடுக்கு செராமிக் மின்தேக்கி உற்பத்தி செய்யும் ஆலையானது, சென்னை அருகேயுள்ள தொழில் பூங்காவில் அமையவுள்ளது.
சென்னையில் பிரத்யேக ஆலையை அமைப்பது தொடா்பாக, முராட்டா நிறுவனத்தைச் சோ்ந்தவா்களுடன் தொடா்ச்சியாக பேச்சுவாா்த்தை நடத்தினோம். அதன் பயனாக, இப்போது அந்த நிறுவனம் தனது உற்பத்தியைத் தொடங்கவுள்ளதை எண்ணி மகிழ்கிறோம். தனது முழு அளவிலான உற்பத்தி செயல்பாடுகளை முராட்டா நிறுவனம் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளும் எனக் கருதுவதாக அமைச்சா் பதிவிட்டுள்ளாா்.