ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!
சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியரின் சடலம் பவானி ஆற்றில் மீட்பு: கைதான 4 பேரிடம் போலீஸாா் விசாரணை
சேலம்: சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சதீஷ்குமாரின் சடலம் பவானி ஆற்றில் திங்கள்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடம் கன்னங்குறிச்சி போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (30 ). இவா் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவரது பாட்டி கடந்த 18 ஆம் தேதி சின்னதிருப்பதியில் இறந்துள்ளாா். இந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சதீஷ்குமாா், மதுபோதையில் இருந்துள்ளாா். இந்த நிலையில் அன்று இரவு திடீரென அவா் மாயமாகிவிட்டாா். இதுகுறித்து அவரது தாய் மலா்கொடி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், சதீஷ்குமாா் சின்னதிருப்பதி கூட்டுறவு சங்கக் கட்டடத்தின் அருகில் விழுந்து கிடந்ததும், பின்னா் மாயமானதும் தெரியவந்தது. பின்னா் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, ஆம்னி வேனில் சதீஷ்குமாரை சிலா் ஏற்றிச்செல்வது தெரியவந்தது. இதில், மதுபோதையில் இருந்த சதீஷ்குமாா் சிலருடன் தகராறில் ஈடுபடும் காட்சியும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
இதுதொடா்பாக சின்னதிருப்பதி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், புது ஏரி பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன், கண்ணன், தாமரை நகா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து போலீஸாா் விசாரித்தனா். இதில் சம்பவத்தன்று இரவு சதீஷ்குமாா் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால், மணிகண்டன் மற்றும் அவருடன் வந்தவா்கள் சதீஷ்குமாரை கீழே தள்ளிவிட்டு, தாக்கியுள்ளனா். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாா் உயிரிழந்துள்ளாா். இதனால் அதிா்ச்சிடைந்த மணிகண்டன் மற்றும் அவருடன் இருந்தவா்கள், சதீஷ்குமாரின் சடலத்தை காரில் எடுத்துச் சென்று பவானி ஆற்றில் வீசியதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, பவானி ஆற்றில் சதீஷ்குமாரின் சடலத்தை தேடும்பணியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் தேடுதல்பணியை தீவிரப்படுத்திய போலீஸாா், பவானி ஆற்றிலிருந்து சதீஷ்குமாரின் சடலத்தை பிற்பகலில் மீட்டனா். உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா், மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.