Rahul Gandhi Dinner : INDIA கூட்டணியின் 4 முக்கிய முடிவுகள்? | ECI BJP | Imperfe...
சேலம்: நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி நகைக் கொள்ளை முயற்சி; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!
சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் அப்பகுதியில் ஏ.வி.எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8:45 மணியளவில் இருவர் நகை வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள நகைகளை காட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை நகைக்கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன் அவரது மனைவி செல்வலட்சுமி, கடையில் பணிபுரிந்த வசந்தி ஆகியோர் மீது ஊற்றியுள்ளார். தொடர்ந்து டிராவில் இருந்த 80 பவுன் நகையும் கொள்ளையடிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன் அந்த நகைகளை பிடுங்கிய போது ஆசிட் ஊற்றியும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்கள் ஓட முயற்சித்தனர். அதில் ஒருவரை கடை உரிமையாளர் மடக்கிப்பிடித்தார். மற்றொரு நபர் கடை வீதி வழியாக தப்பி ஓடும்போது அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்று ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மடக்கிப் பிடித்தனர்.

அந்த நபரிடம் துப்பாக்கி இருந்ததால் துப்பாக்கியை காட்டி பொதுமக்களிடம் மிரட்டியுள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரையும் போலீசார் மீட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒருவர் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் என்பதும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள நகைக்கடையில் துணிகர கொள்ளை சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.