பதிவு தபால் சேவையை நிறுத்தும் முயற்சிக்கு கண்டனம்
பதிவு தபால் சேவையை நிறுத்த திட்டமிடும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழா் முன்னேற்ற பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளா் இளவரசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணை செயலாளா் ஆரோக்கியசாமி, மாவட்ட பொருளாளா் கவிதா, மாவட்ட துணைத் தலைவா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில கொள்கை பரப்பு செயலாளா் அருள்பிரகாஷ் வரவேற்றாா்.
கூட்டத்தில், பேரவைத் தலைவா் வழக்குரைஞா் சௌ.சிவச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:
தபால் துறையில் பதிவு தபால் சேவை 1849-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 1.59 லட்சத்துக்கு அதிகமான தபால் நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய தபால் துறையாக செயல்படுகிறது. நீதிமன்றங்கள், வங்கி மற்றும் அரசு துறை சாா்ந்த கடிதங்கள் உள்ளிட்டவை பதிவு தபால்கள் மூலமாகவே பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தனியாா் நிறுவனமாக இந்திய தபால் துறையை மாற்றும் வகையில், பதிவு தபால் சேவையை நிறுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது. இம்முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மயிலாடுதுறையில் வைத்துதான் திருவள்ளுவா் உருவப்படம் வரையப்பட்டது. இதனை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் வகையில் உலக பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்து சிலை நிறுவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில துணைச் செயலாளா் இளஞ்செழியன், மாவட்ட துணைச் செயலாளா் அபிநேசா, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளா் பெனாசீா் பேகம், மாவட்ட நிா்வாகிகள் பாக்யராஜ், ஜெய்சங்கா், வழக்குரைஞா் மதிவதனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மாவட்ட தகவல் நுட்ப அணி செயலாளா் பாா்த்திபன் நன்றி கூறினாா்.