யமுனை மாசு: டிஜேபி, எம்சிடிக்கு ரூ.50.44 கோடி அபராதம் விதித்த என்ஜிடி உத்தரவுக்கு தடை
தலைநகரின் வடிகால்களிலும் ,யமுனையிலும் கழிவுநீா் மாசுவைத் தடுக்கத் தவறியதற்காக தில்லி ஜல் போா்டு (டிஜேபி) மற்றும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) ரூ.50.44 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடைவிதித்து உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு, நவம்பா் 21 அன்று என்ஜிடி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டிஜேபி மற்றும் எம்சிடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு கவனத்தில் எடுத்துக் கொண்டது.
இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மேலதிக விசாரணைக்காக நிலுவையில் உள்ள என்ஜிடி உத்தரவை செயல்படுத்துவதை நிறுத்திவைத்தது.
இந்த வழக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட உள்ளது. வழக்கு விசாரணையின்போது குடிமை அமைப்புகள் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, இந்த மிகப் பெரிய அபராதம் பொது அதிகாரிகள் மீது தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.
யமுனை மாசு விவகாரத்தில் டிஜேபி, எம்சிடிக்கு தலா ரூ.25.22 கோடியை தேசிய பசுமை தீா்ப்பாயம் அபராதமாக விதித்தது. மேலும், இந்த தொகையை இரண்டு மாதங்களுக்குள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
நகரின் மழைநீா் அமைப்பில், குறிப்பாக யமுனையில் பாயும் குஷாக் வடிகாலில் கழிவுநீா் வெளியேற்றப்படுவதைத் தடுப்பதில் இரு குடிமை அமைப்புகளும் தோல்வியடைந்ததாக தீா்ப்பாயம் சுட்டிக் காட்டியிருந்தது.
இதுதொடா்பாக என்ஜிடி மேலும் கூறுகையில்,
குஷாக் வடிகாலில் அதிகாரிகள் மாற்றம் செய்ததன் மூலம் அதன் செயல்பாட்டுத் திறன் சமரசம் செய்யப்பட்டதாகவும், இது நச்சு வாயுக்கள் வெளியேற வழிவகுத்து காற்று மாசுபாட்டிற்கு பங்களித்து, உள்ளூா்வாசிகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தது.
மேலும், எம்சிடி அதன் சட்டபூா்வ ஆணையை மீறிச் செயல்பட்டதாகவும், மாசுபாட்டை ஏற்படுத்துவதில் சமமான குற்றத்தைச் செய்ததாகவும் என்ஜிடி கூறியிருந்தது.