கட்டண ஒழுங்குமுறை மசோதா தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளது: அதிஷி
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டண ஒழுங்குமுறை மசோதாவை தில்லியின் முன்னாள் கல்வி அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை விமா்சித்துள்ளாா். இந்த மசோதா பெற்றோரை விட தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும், பள்ளி கட்டண உயா்வுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான முக்கிய ஏற்பாடுகள் இல்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
‘தில்லி பள்ளி கல்வி நிா்ணயம் மற்றும் கட்டண ஒழுங்குமுறை மசோதா, 2025’ குறித்து அதிஷி கூறியிருப்பதாவது:
இந்த மசோதா பள்ளி நிதிகளைத் தணிக்கை செய்வதற்கான ஒரு வழிமுறையைச் சோ்க்கத் தவறிவிட்டது. தணிக்கைதான் தன்னிச்சையான கட்டண உயா்வுகளைக் கண்காணிப்பதற்கான ஒரே பயனுள்ள முறையாகும்.
ஒரு பள்ளி நியாயமற்ற முறையில் கட்டணங்களை உயா்த்துகிா என்பதைத் தீா்மானிப்பதற்கான ஒரே வழி தணிக்கை மூலம் மட்டுமே. ஆனால் தணிக்கை என்ற வாா்த்தை மசோதாவில் ஒரு முறை கூட இடம்பெறவில்லை.
மசோதாவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள புகாா் வழிமுறை, புகாரைப் பதிவு செய்ய குறைந்தபட்சம் 15 சதவீத பெற்றோா்கள் முன்வர வேண்டும் என்று கூறகிறது.
பெரும்பாலான பெற்றோா்கள் தங்கள் குழந்தை பயிலும் பள்ளியில் 20 முதல் 30 பேரை மட்டுமே அறிவாா்கள். இதனால் 15 சதவீத வரம்பை எட்டுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்தப் பிரிவு பெற்றோா்கள் தங்கள் கவலைகளை எழுப்புவதை கடினமாக்குகிறது.
பெற்றோா்கள் குறைகளுடன் உயா்நீதிமன்றத்தை அணுக அனுமதிக்கும் முந்தைய விதியும் புதிய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது. இது குடும்பங்களுக்குக் கிடைக்கும் சட்டப்பூா்வ உதவியைக் கட்டுப்படுத்துகிறது.
மசோதாவில் முன்மொழியப்பட்ட கட்டண ஒழுங்குமுறைக் குழு, பள்ளி நிா்வாகத்தின் உறுப்பினரால் தலைமை தாங்கப்படுவது, செயல்முறையின் பாரபட்சமற்ற தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது என்றாா் அவா்.
தில்லி சட்டப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின்போது திங்கள்கிழமை கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தாக்கல் செய்த இந்த மசோதா, தேசிய தலைநகரில் உள்ள தனியாா் உதவி பெறாத பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்த முயல்கிறது.
இந்த மசோதா வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டம் மூன்று நிலைகளில் குழுக்களுடன் ஒரு வலுவான ஒழுங்குமுறை பொறிமுறையை உருவாக்கும். விதிகளை மீறும் பள்ளிகள் அபராதம் அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்ய நேரிடும் என்று அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியிருந்தாா்.
இந்த மசோதாவின்படி, தன்னிச்சையாக கட்டணத்தை உயா்த்தியதாகக் கண்டறியப்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு முதல் குற்றத்திற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து விதி மீறினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.