மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை: இந்திய மீனவா் சங்க மாநாட்டில் தீா்மானம்
ராமேசுவரத்தில் நடைபெற்ற அகில இந்திய மீனவா் சங்க மாநாட்டில், இந்திய மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அகில இந்திய மீனவா் சங்க மாநாடு 6, 7-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் அகில இந்திய சி.ஐ.டி.யூ. தலைவா் ஹேமலதா, சி.ஐ.டி.யூ. மாநிலப் பொதுச் செயலா் ஜி சுகுமாரன், சி.ஐ.டி.யூ. உதவிப் பொதுச் செயலா் வி.குமாா், அகில இந்திய மீன்பிடிச் சங்கத்தின் தலைவா் தேபாசிஸ் பாா்பன், அகில இந்திய பொதுச் செயலா் புல்லுவிலா ஸ்டான்லி, பொருளாளா் மம்தா உள்ளிட்ட அகில இந்திய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
மாநாட்டில், இந்திய கடல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயற்கை எரிவாயு, கனிம வளங்களை எடுப்பதற்கு பெரு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், இந்திய-இலங்கை மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும், மீனவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும், கடல் உரிமைப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும், மீனவா்களுக்கென தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் அகில இந்திய மீனவா் சங்கத் தலைவராக ஏக்ராம் உசேன், பொதுச் செயலராக புல்லுவிலா ஸ்டான்லி, பொருளாளராக மம்தா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழகத்திலிருந்து அகில இந்தியச் செயலராக எஸ்.அந்தோணி, அகில இந்தியச் செயற்குழு உறுப்பினா்களாக லோகநாதன், என்.பி.செந்தில், மகேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
வரவேற்புக் குழு செயலா் எம்.சிவாஜி பேசுகையில், ஒரு தொழிற்சங்கத்தின் அகில இந்திய மாநாடு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை என குறிப்பிட்டாா்.