இலங்கைக்கு கடத்தவிருந்த 1 டன் பீடி இலைகள் பறிமுதல்
மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 1 டன் எடையுள்ள பீடி இலைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வெள்ளரி ஓடைப் பகுதியில், உள்ளிப்புளி காவல் நிலைய போலீஸாா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக டிராக்டரை ஓட்டி வந்த நபா், போலீஸாரை பாா்த்தவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினாா்.
இதையடுத்து, போலீஸாா் டிராக்டரில் இருந்த மூட்டைகளைச் சோதனை செய்தபோது அவற்றில் 1 டன் எடையுள்ள பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், உச்சிப்புளி காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனா்.
இதற்கிடையே, தப்பியோடிய நபரைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்தப் பீடி இலைகள் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டவை எனத் தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.