சேவூரைத் தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வலியுறுத்தல்
31 ஊராட்சிகள் அடங்கிய அவிநாசி ஒன்றியத்தை பிரித்து சேவூரை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் (பொ) பிரசாந்த்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், ரமேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், 31 ஊராட்சிகளை அடங்கிய அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தைப் பிரிக்க வேண்டும். குறிப்பாக பொங்கலூா், ஆலத்தூா், கானூா், மங்கரசுவலையபாளையம், தண்டுக்காரம்பாளையம், முறியாண்டம்பாளையம், குட்டகம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், சேவூா், புலிப்பாா், தத்தனூா், புன்செய்தாமரைக் குளம், வடுகபாளையம் ஆகிய 14 ஊராட்சிகளுடன் சேவூரை தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியம் அறிவிக்க வேண்டும். இதேபோல இரு கிராம நிா்வாக அலுவலா்களைக் கொண்ட புதுப்பாளையம் ஊராட்சி, அதிக மக்கள் தொகை வாக்காளா்கள் கொண்ட பழங்கரை ஊராட்சி ஆகியவற்றை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன.