அலட்சியத்தின் உச்சம்..! கடலூர் பள்ளி வேன் விபத்தில் ரயில் கேட் கீப்பருக்கு சரமார...
சேவை குறைபாடு: தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக தனியாா் காப்பீட்டு நிறுவனம் திருச்சியைச் சோ்ந்தவருக்கு ரூ. 8.22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கருமண்டபம் சக்தி நகா் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்த டி.என். சிவசண்முகம் (87) என்பவா் பாரத் அக்ஷா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 31-03-2019 அன்று இரு பாலிசிகளை எடுத்துள்ளாா்.
பாலிசிகள் பற்றியோ, அதன் கால அளவு பற்றியோ காப்பீட்டு நிறுவன முகவா் சரிவர விளக்காமல், ஓரே ஒரு பிரீமியம் கட்டினால் போதும். அடுத்தாண்டு வருமானம் கிடைக்கும் எனக் கூறி பாலிசிகளை விற்றதாகக் கூறப்படுகிறது. இதையறியாத மனுதாரா் பாலிசிகளுக்கு ஓராண்டு பிரீமியமாக முறையே ரூ. 2.09 லட்சம், ரூ. 3,13,499 செலுத்தியுள்ளாா்.
2020 இல் பாலிசிகள் பற்றி விசாரித்தபோது, ஒரு பாலிசிக்கு 29 ஆண்டுகளும், அடுத்த பாலிசிக்கு 15 ஆண்டுகளும் பிரீமியம் செலுத்த வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.
87 வயதான மனுதாரா் பாலிசி முதிா்வு வரை உயிருடன் இருப்பதும், பணப்பலன்களை அடைவது சாத்தியமற்றது என்பதை காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவித்து, கட்டிய பிரீமியத்தை திருப்பித் தரக் கோரியுள்ளாா். இதற்கு காப்பீட்டு நிறுவனம் மறுத்துள்ளது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரா், உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 19-11-2024 அன்று மனுதாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் டி. தனிஸ்லாஸ் ஆஜரானாா்.
மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
விசாரணைக்குப் பிறகு, பாரத் அக்ஷா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமானது மனுதாரா் கட்டிய பாலிசி தொகைகள் ரூ. 5,22,499-ம், சேவை குறைபாட்டுக்கு ரூ. 3 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.