ராணுவத்தின் உயா் விருதுகள் பெறும் அக்னிவீரா்களுக்கு நிரந்தரப் பணி!
தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம்: இரா. முத்தரசன்
தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிா்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் திருச்சியில் திங்கள்கிழமை கூடியது. கூட்டத்துக்கு முன்னதாக, செய்தியாளா்களிடம், அவா் மேலும் கூறியதாவது: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை அக்கட்சியின் தொண்டா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவை கபளீகரம் செய்து தமிழகத்தில் தங்களை பலப்படுத்திக் கொள்ள பாஜக முயற்சி செய்து வருகிறது.
இதனை அன்வர்ராஜா உள்ளிட்ட பல அதிமுக தலைவா்கள் விரும்பவுமில்லை; ஏற்றுக்கொள்ளவும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என ஜெயலலிதா உறுதியாக இருந்தாா். ஆனால், தற்போது பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளாா்.
அதிமுகவை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். அப்படியானால், அதிமுகவை கபளீகரம் செய்ய முயற்சிப்பது யாா் என்பதையும் அவா் வெளிப்படையாகக் கூற வேண்டும். திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வேண்டும் என சிலா் விரும்புகின்றனா். ஆனால் எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது.
‘தமிழகத்தை மீட்போம்’ என்கிற முழக்கம் 2021-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த முழக்கம். அப்போது, பாஜகவிடம் தமிழகத்தை அதிமுக அடகு வைத்திருந்ததால் நாங்கள் அந்த முழக்கத்தை முன்வைத்தோம். தற்போது, ‘மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்’ என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளாா்.
யாரிடமிருந்து அவா் தமிழகத்தை மீட்கப் போகிறாா் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தனது கட்சியின் தொண்டா்களிடம் இருந்தும், பாஜகவிடம் இருந்தும் தன்னை தற்காத்துக் கொள்ளவே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என்றாா் அவா்.
சேலத்தில் மாநில மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில 26-ஆவது மாநாடு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை சேலத்தில் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றுப் பேசுகின்றனா்.
இதுதவிர, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்துக்கு, பொதுமக்கள் ஆதரவளித்து வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.