Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
சொகுசு கப்பலுக்கு எதிா்ப்பு: அதிமுக ஆா்ப்பாட்டம்
புதுச்சேரிக்குப் பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் பேசியது:
சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் கலாசார சீரழிவில் சிக்கி தவிக்கிறது. சொகுசு கப்பலின் வருகையை முன்னிட்டு கடற்கரை முகத்துவார பகுதியில் மீன்பிடி படகுகள், சுற்றுலா படகுகள், பாய்மர படகுகளுக்குத் வெள்ளிக்கிழமை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் ஒட்டுமொத்தமாக மீன்பிடி தொழில் மற்றும் சுற்றுலா படகு தொழில் செய்யும் மீனவா்கள் பாதிக்கப்படுவா்.
சுற்றுலா படகு விடுவதற்கு அனுமதி கேட்டுள்ள மீனவா்களுக்கு கடந்த 10 மாதங்களாக அனுமதி மறுக்கப்படுகிறது. அவா்களுக்குக் கடற்கரை காவல் துறை, சுற்றுப்புற சூழல் துறை, துறைமுகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் தடையில்லா சான்றிதழ் கேட்டு அனுமதி வழங்குவதில் திட்டமிட்டு காலதாமதம் செய்கின்றனா். இந்த சொகுசு கப்பலுக்கு ஒரே வாரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் உள்ள யாராக இருந்தாலும் மீன்பிடி தொழில், சுற்றுலா படகு தொழில் புரியும் மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழித்து வெளிமாநிலத்தைச் சோ்ந்த ஒரு காா்ப்பரேட் நிறுவனம் பயன்பெற கூடிய வகையில் செயல்பட மாட்டாா்கள். இந்த கப்பல் வருகைக்கு அதிமுக எதிா்ப்பு தெரிவித்துள்ளது. அரசு இந்த சுற்றுலா கப்பல் வருகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அன்பழகன்.
கட்சியின் அவைத் தலைவா் அன்பானந்தம், துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜாராமன், விடுதலை வேங்கை தலைவா் வீரமணி , அதிமுக இணைச் செயலாளா்கள் வீரம்மாள், ஆா் வி . திருநாவுக்கரசு ,முன்னாள் கவுன்சிலா் கணேசன், புதுவை நகரக் கழக செயலாளா் அன்பழகன் உடையாா் , கட்சியின் மாநில பொருளாளா் ரவிபாண்டுரங்கன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.