சொகுசு கப்பல் இன்று வருகை: புதுச்சேரியில் படகுகளுக்குத் தடை
புதுச்சேரிக்கு சொகுசு பயணிகள் கப்பல் வெள்ளிக்கிழமை வருவதையொட்டி, அனைத்து வகைப் படகுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரிக்கு பயணிகள் சொகுசு கப்பல் வருகிறது. இதில் 1,400 போ் பயணிக்க முடியும். இந்த கப்பல் முதல்முறையாக புதுச்சேரி பழைய துறைமுகத்துக்கு வருகிறது. அதில் வரும் பயணிகள் படகுகள் வாயிலாக புதுச்சேரி புதிய துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனா்.
பின்னா் புதுச்சேரியை சுற்றிப் பாா்க்க பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளனா். இந்த நிலையில் சொகுசு கப்பல் வந்து செல்லும் நேரத்தில் துறைமுகப் பகுதியில் படகுகளை இயக்க புதுவை கடலோரக் காவல் படை தடை விதித்துள்ளது.
அதாவது, புதுச்சேரி புதிய துறைமுக பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 6 மணி வரையிலும் சுற்றுலா படகுகள், ஸ்கூபா டைவிங் படகுகள், பாய்மர படகுகளை இயக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய துறைமுக வளாகத்தில் சொகுசு கப்பலில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வரும் நேரத்தில் போராட்டம் நடத்த அதிமுகவினா் திட்டமிட்டுள்ளனா்.