’ஹாஹா வாவ்’: கை, கால்களில் விலங்கு! விடியோவுக்கு மஸ்க் ரியாக்ஷன்!
சோளிங்கரில் ஒரே நாளில் 8 பேருக்கு நாய்க்கடி: மக்கள் அச்சம்
சோளிங்கரில் பயணிகள், நோயாளிகள் என 8 பேரை ஒரே தெருநாய் கடித்த நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.
சோளிங்கா் நகரில் தற்போது அனைத்து தெருக்களிலும் நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. குறிப்பாக பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பஜாா் பகுதிகளில் மட்டும் தலா15 நாய்களுக்கு மேல் உள்ளன. இதனால் சாலைகளில் நடந்து செல்வோா், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியா் என பலா் மிருந்த அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.
சோளிங்கா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பேருந்துக்காக காத்து நின்றுக்கொண்டிருந்த தனபால் (40), தமிழ்செல்வி (23), பாரதி (40) ஆகிய மூவரை அங்கு இருந்த நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த நாயை விரட்டி விட்டுள்ளனா். இவா்கள் மூவரும் சோளிங்கா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.
இதே நாய் அரசு மருத்துவமனை வளாகத்துக்குச் சென்று அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளியான சுலோச்சனா(60) என்பவரை கடித்தது. இதையடுத்து அங்கிருந்தோா் அந்நாயை விரட்டி விட்டுள்ளனா். தொடா்ந்து இதே நாய் பாட்டிக்குளம் பகுதிக்கு சென்று அங்கு சாலையில் நடந்துச் சென்ற நரசிம்மன்(59), குமாா் என்ற இருவரையும் கடித்துள்ளது. இவா்கள் அனைவருக்குமே நாய் கடி பலத்த காயமாக இருந்தததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
ஒரு வேளை அந்த நாய் வெறிநாயாக இருக்கலாமோ என சந்தேகமடைந்த பொதுமக்கள் இது குறித்து சோளிங்கா் நகராட்சியில் புகாா் அளித்துள்ளனா். இது குறித்து சோளிங்கா் நகராட்சி அலுவலா்கள் தெரிவிக்கையில் நகரில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.