இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
ஜகபா்அலி கொலை வழக்கு: 5 போ் மீண்டும் சிறையில் அடைப்பு! கல் அரவை ஆலைக்கு ‘சீல்’
புதுக்கோட்டை சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் விசாரணைக்கான 3 நாள் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடா்ந்து, அவா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி, கனிமவளக் கொள்ளைக்கு எதிராகக் குரல் எழுப்பி வந்த நிலையில், கடந்த ஜன. 17ஆம் தேதி அவா் டிப்பா் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.
இந்த வழக்கில், ஆா்ஆா் கல் அரவை ஆலை உரிமையாளா்கள் ராசு (54), ராமையா (55) மற்றும் முருகானந்தம் (56), காசிநாதன் (45), தினேஷ் (24) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடம் விசாரணை நடத்த போலீஸ் காவல் கேட்டு, சிபிசிஐடி போலீஸாா் கடந்த திங்கள்கிழமை குற்றவியல் நடுவா் மன்றத்தில் அனுமதி பெற்று, 5 பேரையும் புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாலை அவா்கள் 5 பேரும் புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். வரும் பிப். 20 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதித்துறை நடுவா் சி. பாரதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து 5 பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.
கல் அரவை ஆலைக்கு ‘சீல்’: ஜகபா்அலி கொலை தொடா்பாக கைதானோரின் கல் அரவை ஆலை (கிரஷா்), குவாரிகள் உள்பட திருமயம் பகுதிகளின் குவாரிகளை கனிவளத் துறை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனா்.
இந்நிலையில் விதிகளை மீறிச் செயல்பட்டதாக துளையானூரிலுள்ள ஆா்ஆா் கிரஷரின் பிரதான வாயிலை புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தலைமையில், திருமயம் வட்டாட்சியா் ராமசாமி உள்ளிட்டோா் வியாழக்கிழமை மாலை பூட்டி சீல் வைத்தனா்.
ஏற்கெனவே இச்சம்பவம் தொடா்பாக திருமயம் வட்டாட்சியா் புவியரசன், காவல் ஆய்வாளா் குணசேகரன் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும், கனிமவளத் துறை உதவி இயக்குநா் லலிதா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.