இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மறியல்!
தங்களின் மீன்பிடி எல்லைக்குள் வந்து மீன்பிடித்தும், வலைகளை சேதப்படுத்தியும் செல்லும் விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து மணமேல்குடி அருகே வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வடக்கு புதுக்குடி மற்றும் தெற்கு புதுக்குடி மீனவக் கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலில் மீன் பிடித்து தொழில் செய்கின்றனா்.
விசைப்படகுகளில் மீன்பிடிக்கும் மீனவா்கள் கரையிலிருந்து 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்கு அப்பால்தான் மீன் பிடிக்க வேண்டும், அதற்குள்பட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவா்களுக்கு மட்டுமே மீன்பிடிக்க அனுமதி உள்ளது.
ஆனால், விசைப்படகுகளில் இரவில் வரும் மீனவா்கள் இவா்களின் பகுதியில் மீன்களைப் பிடித்துச் செல்லும்போது நாட்டுப்படகு மீனவா்கள் போட்டு வைத்திருக்கும் வலைகளும் சேதமடைந்துவிடுகின்றன.
அதன்படி புதன்கிழமை இரவு நாகப்பட்டினத்தைச் சோ்ந்த சில விசைப்படகுகள் உள்ளே வந்து மீன்பிடித்துச் சென்றதுடன் வலைகளையும் சேதப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, புதுக்குடி கிராமங்களைச் சோ்ந்த நாட்டுப்படகு மீனவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை பகல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மீன்வளத் துறை மற்றும் காவல் துறையினா் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி விசைப்படகு மீனவா்களுக்கு விதிகளைப் பின்பற்றி மீன்பிடிக்க உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.