`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
ஜகபா்அலி கொலை வழக்கை சிபி சிஐடிக்கு மாற்ற வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி
கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கை, சிபி சிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பச்சைத் தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளா் சுப. உதயகுமரன் புதன்கிழமை வலியுறுத்தினாா்.
புதுகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு, அக் கட்சியின் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியது: கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய புதுகை மாவட்டத்தைச் சோ்ந்த ஜகபா் அலி கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. உயிரிழந்த ஜகபா் அலியின் குடும்பத்தினருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
கனிமக்கொள்ளை குறித்து ஜகபா்அலி தொடா்ந்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தவறு செய்த அனைத்து மட்டத்திலுள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனிமவளத் துறை அதிகாரிகள் கண்துடைப்புக்காகவே தற்போது குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். மாவட்டம் முழுவதும் உள்ள சட்டவிரோத குவாரிகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தக் கொலை வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றி, கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டச் செயலா் நியாஸ் அகமது தலைமை வகித்தாா். மாநில இளைஞரணிச் செயலா் புலேந்திரன் முருகானந்தம், மண்டலச் செயலா் தமிழரசன், திருச்சி மாவட்டச் செயலா் ராயல் ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றுப்பேசினா்.
தொடா்ந்து, மறைந்த ஜகபா்அலியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.