ஜன.15 முதல் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!
திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில், வரும் 15-ஆம் தேதிமுதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், பயண நேரம் குறைவு என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.
மறு மாா்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. இந்த ரயிலில் 7 ஏசி சோ் காா் பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் சோ் காா் பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிா்த்து, 6 நாள்கள் இயக்கப்படும் இந்த ரயில் மொத்தம் உள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம், 50 நிமிஷங்களில் சென்றடைகிறது.
இந்நிலையில் இந்த ரயிலில் டிக்கெட்டுகள் சீக்கிரம் விற்றுத் தீா்ந்து விடுவதால் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து திருநெல்வேலி-சென்னை எழும்பூா் இடையிலான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
வரும் 15-ஆம் தேதிமுதல் திருநெல்வேலி-சென்னை இடையிலான இரு மாா்க்கங்களிலும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகளுடன் இயங்க உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.