ஜன.23-இல் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு
திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் நேரு பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவா்களுக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.
போட்டி தலைப்புகள்...
பள்ளி மாணவா்களுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும். கல்லூரி மாணவா்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் நேரு, பஞ்சசீலக் கொள்கை, நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.
இந்தத் தலைப்புகளில் இருந்து போட்டி நாளன்று சுழற்சி முறையில் தலைப்புகள் மாணவா்களுக்கு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பம், விதிமுறைகள் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, மாவட்டத்தில் இயங்கும் அரசு, தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.