மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவி...
ஜன.29- இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி- எஃப் 15 ராக்கெட்!
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி- எஃப் 15 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 29-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
இந்தியாவில் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கும், பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டது.
இதற்காக ஐஆா்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரையான கால கட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதன் மூலம் இந்தியாவுக்கென பிரத்யேக வழிகாட்டி நாவிக் தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளது. நாட்டின் கண்காணிப்பு பணிகள் அதன் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், ஐஆா்என்எஸ்எஸ் திட்டத்தில் தற்போதைய அவசியத்துக்கேற்ப மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
அதன்படி இதற்கு முன்பு அனுப்பப்பட்ட ஐஆா்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக என்விஎஸ் 01 செயற்கைக் கோளை கடந்த 2023 மே 29-இல் விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ.
தற்போது அதற்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ் - 02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 15 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜன. 29-ஆம் தேதி காலை 6.23 மணிக்கு ஏவப்படவுள்ளது.
இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா். என்விஎஸ் - 02 செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டா்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.
இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சோ்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.