சிபிஐ விசாரணை வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது: விஜய்
`ஈரோடு கிழக்கில் உதயசூரியன் மறைந்தால்தான் தமிழகத்துக்கு வெளிச்சம்' - சீமான் பேச்சு
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் 60 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் மக்களை ரூ. 1000-த்துக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளனர். இந்த நிலையை மாற்றி, தமிழக மக்களை தன்மானத்தோடு வாழ வைக்க முடியாதா என்ற ஏக்கத்தில்தான் நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் நிற்கிறது.தேர்தல்களில் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு 1.1 சதவீத வாக்குகளில் தொடங்கி இன்று 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று, தேர்தல் ஆணைய அங்கீகாரத்தையும் பெற்றுள்ள கட்சியாக மாறியுள்ளோம். இது மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
வெல்ல முடியாத படை என்று ஒன்று இல்லை என்று ரஷ்ய அதிபர் ஸ்டாலின் சொல்கிறார். அதுபோல் திமுக ஒன்றும் வெல்ல முடியாத கட்சி கிடையாது. அந்தக் கட்சியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் ஈரோடு தேர்தல் களத்தில் தனித்து நிற்கிறோம். கடந்த மூன்றரை ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி திமுக-வினர் வாக்கு கேட்க மாட்டார்கள். பணம் கொடுத்து வாக்குகளைப் பெறவே நினைப்பார்கள். அவர்களை வாக்கு என்ற ஆயுதம் கொண்டு வீழ்த்த வேண்டும். உலகெங்கும் மாற்றங்கள் ஒரு சிறு புள்ளியில் இருந்துதான் தொடங்கியுள்ளது. அதுபோல இதை மாறுதலுக்கான தேர்தலாக மக்கள் மாற்ற வேண்டும்.
தேர்தலின்போது வாக்கை விற்கும் அரசியலை மக்கள் ஏற்க கூடாது. அவர்கள் நமது வாக்கை விலைக்கு வாங்கி நாட்டை விற்கும் நிலையை அனுமதிக்கக் கூடாது. திமுக ஆட்சியில் ஆசிரியர், போக்குவரத்து ஊழியர், மாணவர், உழவர், செவிலியர், மருத்துவர் என எல்லோரும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்கள். ஆனால், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் மார்தட்டிக் கொள்கிறார். அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக ரூ 5,000 கொடுக்க வேண்டும் என்ற சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியில் பொங்கல் பரிசு என ரூ 103 மட்டும் கொடுத்துள்ளார். மது விற்பனையை ரூ 45 ஆயிரம் கோடியில் இருந்து, ரூ 50 ஆயிரம் கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயம் செய்கிறது. படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு பதிலாக, குடிப்பவர்களின் எண்ணிக்கையை பெருக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்கிறது.
ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடாமல் எல்லோரும் விலகிய நிலையில், துணிச்சலுடன் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை வாக்காளர்கள் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். எது சரியான அரசியல் என ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அறிவார்கள். ஜனநாயக முறையில் இந்த தேர்தல் நடக்காது என்றாலும், இந்த கொடுமையை யார் தடுப்பது என்று நாங்கள் போட்டியிடுகிறோம். இந்த தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கில் உதயசூரியன் மறைந்தால்தான் தமிழகத்திற்கு விடிவு ஏற்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிடம் - தமிழ்த்தேசிய சித்தாந்தங்கள் மோதுகின்றன. இதில், மாற்றத்திற்கான ஒரு புரட்சிகர விதை ஊன்றப்படும்.
நாட்டில் ஊழல், லஞ்சம் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. இதை ஒழிக்க ஒரு நேர்மையாளன் ஆட்சிக்கு வந்தால் போதுமானது. ரூ.8.50 லட்சம் கோடி கடனாக பெற்ற தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை, தரமான போக்குவரத்து, குடிநீர், சாலை வசதிகளை அரசால் வழங்க முடியவில்லை. அரசு தரமாக இல்லாததால், அரசின் சேவைகள் தரமானதாக இல்லை. தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரும்போது இதனை ரூ 2000 வழங்குவதாகச் சொல்வார்கள். கடனை 10 லட்சம் கோடியாக உயர்த்தி, நம்மை கடன்காரர்களாக்கி விடுவார்கள். 90 சதவீத குற்றங்கள் போதையின் காரணமாகவே நடைபெறுகின்றன. ஒருபுறம் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்று சொல்லி விட்டு, மதுவிற்பனை ஏன் குறைந்தது என்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்" என்றார்.