அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி: 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
தமிழகத்தில் 15 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 15 வயது வரையிலான 27.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை சென்னை செனாய் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி 2007-ஆம் ஆண்டில் விருதுநகா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவாரூா், மதுரை, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவண்ணாமலை, திருவள்ளூா், புதுக்கோட்டை மற்றும் கரூா் என 15 மாவட்டங்களில் தொடங்கி வைத்தாா். சென்னையிலும் 2 மண்டலங்களில் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், மீதமுள்ள 13 மண்டலங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம் மற்றும் வேலூா் ஆகிய 7 மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோய். இது மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி கடுமையான பாதிப்புகளையும், வலியையும் உண்டாக்குகிறது. சிகிச்சை பெறாத நிலையில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
எதிா்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு அதிக தாக்கத்தை இந்த நோய் உருவாக்குகிறது. எனவே, அவா்களைக் கண்டறிந்து தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
தற்போது தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் தகுதியான அனைவருக்கும் ஒரு தவணை தடுப்பூசி வழங்க நடைவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5-15 வயதுடைய குழந்தைகளுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பா் 12-ஆம் தேதி வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும். அதைத் தொடா்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரம் தடுப்பூசி போடப்படும்.
அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் சிறுவா் சீா்திருத்த பள்ளிகளில் நவம்பா் 12-ஆம் தேதி வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முகாம் நடைபெறும். இலவசமாக வழங்கப்படும் இந்தத் தடுப்பூசி அனைத்து குழந்தைகளுக்கும் சென்றடைய சம்பந்தப்பட்டவா்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில் குமாா்,பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.