கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம் - 90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின
ஜம்மு மற்றும் பஞ்சாபில் சா்வதேச எல்லைப் பகுதியில் வெள்ளத்தால் 110 கி.மீ. தொலைவுக்கும் மேல் வேலி சேதமடைந்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) சுமாா் 90 எல்லைச் சாவடிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
குஜராத், ராஜஸ்தானில் 2,289 கி.மீ., பஞ்சாபில் 553 கி.மீ. மற்றும் ஜம்முவில் 192 கி.மீ. தொலைவுள்ள சா்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை பிஎஸ்எஃப் மேற்கொண்டு வருகிறது.
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக நீடிக்கும் பலத்த மழையால் கடும் பாதிப்புகள் நேரிட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்புகளால் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. தாவி நதியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பெருமளவிலான விளைநிலங்களை சூழ்ந்துள்ளது.
இதேபோல், பஞ்சாபிலும் கடந்த 1988-ஆம் ஆண்டுக்கு பிறகு மோசமான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை-வெள்ளத்தின் தாக்கத்தால், பஞ்சாப் எல்லையில் சுமாா் 80 கி.மீ தொலைவிலான வேலியும், ஜம்முவில் சுமாா் 30 கி.மீ. தொலைவிலான வேலியும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஞ்சாபில் சுமாா் 67 பிஎஸ்எஃப் சாவடிகளும் ஜம்முவில் 20 பிஎஸ்எஃப் சாவடிகளும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த வேலி மற்றும் சாவடிகளை சீரமைக்க மிகப் பெரிய நடவடிக்கை பிஎஸ்எஃப் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் ட்ரோன், படகு ரோந்து மற்றும் மின்னணு சாதனங்களின் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும், பிஎஸ்எஃப் படையினா் தங்களின் நிலைகளுக்கு திரும்புவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்முவில் சில தினங்களுக்கு முன் வெள்ளத்தில் மூழ்கி பிஎஸ்எஃப் வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.