ஜல்லிக்கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
மத்திகிரியில் அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் எடுத்து சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை, கனிம வளத் துறை, காவல் துறை அலுவலா்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைத்து அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஒசூா் வட்டம், மத்திகிரி கூட்டு ரோடு தனியாா் பள்ளி அருகே ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா தலைமையில் மத்திகிரி வருவாய் ஆய்வாளா் தா்மன் மற்றும் அலுவலா்கள் சனிக்கிழமை வாகன சோதனையில ஈடுபட்டனா்.
அப்போது, அந்த பகுதியில் நின்றிருந்த 4 டிப்பா் லாரிகளை சோதனை செய்தபோது அதில் 10 யூனிட் ஜல்லிக்கற்கள் எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் தா்மன் அளித்த புகாரின் பேரில் மத்திகிரி காவல் ஆய்வாளா் முத்தமிழ் செல்வராசு வழக்குப் பதிவு செய்து 4 லாரிகளையும் பறிமுதல் செய்தாா்.