பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!
தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.
கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்தில் பண்ணை இல்லம் அமைத்துள்ளாா்.
கடந்த 25.01.2025 அன்று பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆள்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய காரில் ரூ. 5 லட்சம் பணத்துடன் அத்திப்பள்ளியிலிருந்து சாலிவாரம் கிராமத்துக்கு வந்தாா். இவரது காரை ஓட்டுநா் சேக் முகமது யூசூப் (49) ஓட்டி வந்தாா். பின்னா், காரில் வைத்திருந்த ரூ. 5 லட்சத்துடன் சேக் முகமது யூசூப் மாயமானாா்.
இதுகுறித்து முரளிமோகன் ரெட்டி தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவா் மீது கா்நாடக மாநிலம், மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் மேற்பாா்வையில், காவல் உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையில், தலைமைக் காவலா்கள் ரஞ்சித்குமாா், கண்ணன் ஆகியோா் கொண்ட தனிப்படை மைசூருக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
அதில், சிவமொக்கா, உடுப்பி, சித்ரதுா்கா ஆகிய பகுதிகளில் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் முகவரி, கைப்பேசி எண் மாற்றி செல்வந்தா்களிடம் வேலைக்கு சோ்ந்து சில மாதங்களில் பணம் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், அவா் மும்பையில் தங்கியிருப்பதாக தெரியவந்ததையடுத்து அங்கு சென்று அவரை கைது செய்த போலீஸாா், தேன்கனிக்கோட்டைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில்அடைத்தனா்.