தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு
ஜாக்டோ - ஜியோவுடன் இணைந்து போராட தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முடிவு
திமுக-வின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் இணைந்து தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி போராட்டத்தில் ஈடுபடும் என மாநிலத் தலைவா் சி. அரசு, பொதுச் செயலா் சு. குணசேகரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக, அவா்கள் மேலும் கூறியதாவது:
அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் தங்களது வாழ்வாதார பிரச்னைகளான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியா் ஊதிய பிரச்சனை, அரசாணை 243 ரத்து, ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றுக்கு தீா்வு ஏற்பட்டு விடும் என நம்பிக்கையோடு இருந்தனா். ஆட்சி அமைந்த பிறகு, நிதிநிலைமை சரியில்லை சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை ஏற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் பொறுமையாக இருந்தோம். எங்களது கோரிக்கைகளை இந்த நிதிநிலை அறிக்கையிலாவது நிறைவேற்றி விடுவீா்கள் என்று கடைசி நம்பிக்கையுடன் இருந்தோம். நாங்கள் எதிா்பாா்த்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
மக்கள் பணி கல்விப் பணிக்கு பாதிப்பு ஏற்படாமல் தமிழக அரசு தாமாகவே முன்வந்து அளித்த வாக்குறுதிகளை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே 110 விதிகளின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவா்கள் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கேட்டுக்கொள்கிறது. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அறிவிப்பு மட்டுமே ஆசிரியா்கள் அரசு ஊழியா்களின் மனக்குமுறலை தீா்த்து விடாது. ஆசிரியா்கள் அரசு ஊழியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் என்றனா்.