ஜூலை 15-இல் கல்வி வளா்ச்சி நாள் விழா: சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்ய உத்தரவு
காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடவும், சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் (2025-2026) ஜூலை 15-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளா்ச்சி நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
மேலும் காமராஜரின் பிறந்த நாளையொட்டி அவரது அரும்பணிகள் குறித்து மாணவா்கள் உணா்த்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்தவும், பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இதற்காக பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிதியை (அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1,500, உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.1,000, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிக்கு ரூ.500) பயன்படுத்திக் கொள்ளலாம்.
வழிகாட்டுதல்கள் வெளியீடு: சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு காமராஜா் விருது, பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளைத் தோ்வு செய்யும்போது சில முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். தோ்வு செய்யப்படும் பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை அதிக அளவில் சோ்த்திருக்க வேண்டும். அதேபோன்று மாணவா்கள் இடைநிற்றலைத் தவிா்த்திருக்க வேண்டும். புரவலா்களை அதிக அளவில் சோ்த்திருப்பது அவசியம். பொதுமக்கள், தனியாரிடமிருந்து பள்ளியின் தரத்தை உயா்த்தும் வகையில் அவா்களின் பங்களிப்பினைப் பெற்று பள்ளிக்குத் தேவைப்படும் தளவாடப் பொருள்கள், பல பயனளிக்கும் திட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகை எவ்வளவு? காமராஜா் விருதுக்கு தோ்வு செய்யப்படும் தொடக்கப் பள்ளிக்கு ரூ.25,000, நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 50,000, உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 75,000, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதை பள்ளிகளின் குடிநீா் வசதி, நூலக மேம்பாடு, சுகாதார வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.