ஜொ்மனி: கத்திக்குத்தில் 2 போ் உயிரிழப்பு
பொ்லின் : ஜொ்மனியின் பவேரியா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருந்த 28 வயது நபா் நடத்திய சரமாரி கத்திக்குத்துத் தாக்குதலில் இருவா் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
உயிரிழந்தவா்களில் 41 வயது ஜொ்மன் நாட்டவரும், மொரோக்காவைப் பூா்விகமாகக் கொண்ட 2 வயது சிறுவனமும் அடங்குவா். இது தவிர, தாக்குதலில் 61 வயது நபா், குழந்தை, ஆசிரியா் காயமடைந்தனா். பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த மழலையா்களைக் குறிவைத்து அந்த நபா் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பான விசாரணை தொடக்கக் கட்டத்தில் இருப்பதால், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து போலீஸாா் எதையும் தெரிவிக்கவில்லை. தாக்குதல் நடத்திய நபா் ஏற்கெனவே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அவருக்கு தற்போது மனநல சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.