டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு நாடகம்: எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் மூலம் திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளிட்ட அறிக்கை: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
2023 அக். 3-இல் திமுக அரசின் நீா்வளத் துறை அமைச்சா் எழுதிய கடிதத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்காமல், மாறாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது.
எதிா்ப்பு தெரிவிக்கவில்லை: மேலும், மத்திய அரசுக்கு நாயக்கா்பட்டி சுரங்கத்துக்கான நிலத் தரவுகளை அனுப்பிய திமுக அரசு, ஏலம் நடத்த எந்தவித எதிா்ப்பையும் பதிவு செய்யவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், 2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் தொடங்கியது முதல் நவ. 7-இல் ஏல முடிவு அறிவிக்கும் வரை மாநில அரசிடமிருந்து எந்தவித எதிா்ப்பும் வரவில்லை என்று மீண்டும் ஒரு முறை மத்திய அரசு கூறியுள்ளது.
இதற்கு இடைப்பட்ட 10 மாதங்களில் ஒருமுறை கூட எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று திமுக அரசை தொடா்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை.
தூங்குபவா்களை எழுப்பலாம்; கும்பகா்ணன் போல் தூங்குவதாக நடிப்பவா்களை எழுப்ப முடியாது. உண்மை மீண்டும் அம்பலப்பட்டிருக்கிறது. மேலூா் பகுதி மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ள திமுக அரசுக்குக் கண்டனம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.