மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்
ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒசூா் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியாா் பேருந்தை மணி என்பவா் ஓட்டிச் சென்றாா். பேருந்தில் நடத்துநா் முனிராஜ் உள்பட 45க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.
ஒசூா், தா்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென பேருந்தின் முன்பக்க டயா் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர இரும்பு வேலியை உடைத்துகொண்டு 2 அணுகுசாலைகளைக் கடந்து வேகமாக சென்றது. அப்போது, சாலையில் இருந்த 2 மரங்கள் மீது மோதி பாதை மாறி சென்று தொழிற்சாலையின் சுற்றுச்சுவரையும் உடைத்து உள்ளே புகுந்தது. அப்போது, அங்கிருந்த கழிநீா்க் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கட்டுப்பாட்டை இழந்து அணுகு சாலைகளில் பேருந்து செல்லும்போது வாகனங்கள் எதிரே வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.