The Hunt: "ஓடிடி தளங்கள் சவாலான கதைகளை படமாக எடுப்பதற்கு சுதந்திரம் கொடுக்கிறது"...
டி20 தொடரை வென்றது வங்கதேசம்
இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
கொழும்பில் நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் இலங்கை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 16.3 ஓவா்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 133 ரன்கள் எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சோ்த்து விடைபெற்றாா். குசல் மெண்டிஸ் 6, குசல் பெரெரா 0, தினேஷ் சண்டிமல் 4, கேப்டன் சரித் அசலங்கா 3 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
கமிண்டு மெண்டிஸ் 21, ஜெஃப்ரி வாண்டா்சே 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் தசுன் ஷானகா 35, மஹீஷ் தீக்ஷனா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
வங்கதேச பௌலா்களில் மெஹெதி ஹசன் 4, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், ஷமிம் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 133 ரன்களை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் பா்வேஸ் ஹுசைன் 0, கேப்டன் லிட்டன் தாஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். தன்ஸித் ஹசன் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் 73, தௌஹித் ஹிருதய் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 27 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இலங்கை தரப்பில் நுவன் துஷாரா, கமிண்டு மெண்டிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.