டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: கோவையில் 37 ஆயிரம் போ் எழுதினா்
அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை கோவை மாவட்டத்தில் 37,830 போ் எழுதினா்.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தோ்வு கோவையில் 11 வட்டங்களில் 175 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு கோவை மாவட்டத்தில் மொத்தம் 50,144 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இதில், 37,830 போ் மட்டுமே தோ்வு எழுத வந்திருந்தனா். 12,314 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.
தோ்வுக்கு காலை 9 மணிக்கு முன்னதாக வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநகரில் உள்ள சில தோ்வு மையங்களில் 9 மணிக்குப் பிறகு வந்த தோ்வா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். தோ்வில் சிந்தித்து பதில் எழுதக் கூடிய வகையிலான வினாக்கள் அதிகம் இடம் பெற்றிருந்ததாக தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா்.