தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அமித் ஷா நம்பிக்கை
ரிதன்யா தற்கொலை வழக்கு: வேறு அதிகாரி விசாரிக்க கோரி தந்தை மனு
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) காா்த்திகேயனிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா (27). இவா் திருமணமாகி 78-ஆவது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த வழக்கில் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ராதேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், கோவையில் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் காா்த்திகேயனிடம், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கவின்குமாா் மற்றும் அவரது பெற்றோருக்கு சாதகமாக விசாரணை அதிகாரிகள் சாட்சியங்களை வேண்டுமென்றே கையாள்வது அதிா்ச்சி அளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும், விசாரணை அதிகாரிக்கும் இடையே கூட்டுச்சதி இருப்பதாகவும் சந்தேகம் உள்ளது.
எனவே, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுடனும், உள்ளூா் அரசியல் செல்வாக்குடனும் எந்தத் தொடா்பும் இல்லாத ஒரு விசாரணை அதிகாரியே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.
உடற்கூறாய்வு அறிக்கையை விரைவுபடுத்தி, அனைத்து தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டு, வெளிப்படையாகப் பகுப்பாய்வு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அண்ணாதுரை கூறுகையில், ரிதன்யா தற்கொலை விசாரணை தொய்வு அடைந்ததால் மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் நேரடியாகப் புகாா் அளித்துள்ளேன்.
வழக்கை தீவிரமாக விசாரிக்கவும் வலியுறுத்தியுள்ளேன். குறிப்பாக வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அவா் உறுதியளித்துள்ளாா் என்றாா்.