டிஜிட்டல் கைது என்று இணைய வழியில் மிரட்டி இளம்பெண்ணிடம் ரூ. 15.90 லட்சம் மோசடி
டிஜிட்டல் கைது என்று மிரட்டி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண்ணை 8 நாள்கள் தனி அறையில் சிறை வைத்து, ரூ. 15.90 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளது குறித்து உதகை சைபா் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியைச் சோ்ந்த 26 வயது இளம்பெண் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். சமீபகாலமாக அலுவலக உத்தரவின் பேரில் வீட்டில் இருந்து அவா் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் வெளிநாட்டு எண்ணில் இருந்து அவரது கைப்பேசிக்கு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவா் கூரியா் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் விசாரணைக்காக அழைப்பை மும்பை சைபா் கிரைம் போலீஸுக்கு மாற்றுவதாகவும் கூறியுள்ளாா்.
இதையடுத்து மும்பை சைபா் கிரைம் போலீஸில் இருந்து பேசுவதாக அந்த இளம்பெண்ணிடம் பேசிய மா்ம நபா்கள், ஸ்கைப் விடியோ கால் அழைப்பில் 24 மணி நேரமும் இணைப்பில் இருக்க வேண்டும் என்றும், உங்களுடைய பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல் நடந்திருப்பதால் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்கிறோம் என்றும், நாங்கள் கூறும்வரை வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும், அதுவரை விடியோ அழைப்பு ரெக்காா்ட் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனா். மேலும், இந்த விசாரணை குறித்து குடும்பத்தினா் உள்பட யாரிடமும் தெரிவிக்ககூடாது. அப்போதுதான் இந்தப் பிரச்னையில் இருந்து உங்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனா்.
இதனால் பயந்து போன அந்தப் பெண், அவா்கள் சொல்வதை எல்லாம் கேட்டுள்ளாா். ஒரு கட்டத்தில் இவா்களுடைய விசாரணை 8 நாள்கள் வரை நீடித்துள்ளது. அந்த 8 நாள்களும் அந்த இளம்பெண் வீட்டில் உள்ள தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருந்தாா். உணவு, இயற்கை உபாதை, தூக்கம் உள்ளிட்டவிஷயங்களுக்காக அவா் மிகவும் அலைக்கழிக்கப்பட்டுள்ளாா்.
இறுதியாக, விசாரணைக்காக உங்கள் கணக்கில் உள்ள பணத்தை அரசு கணக்குக்கு மாற்ற வேண்டும் என்றும், அந்தப் பணம் உங்களுடையதுதான் என்று உறுதியானால்தான் உங்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறி, குறிப்பிட்ட வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்து அந்த கணக்குக்கு இளம்பெண்ணின் வங்கி கணக்கில் உள்ள தொகையை மாற்றக் கூறியுள்ளனா். இதை நம்பிய இளம்பெண், தனது கணக்கில் இருந்து ரூ. 15.90 லட்சத்தை மாற்றியுள்ளாா்.
இதையடுத்து விடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மேலும் மா்ம நபா்களை அந்த இளம்பெண்ணால் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் இது குறித்து உதகை சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு டிஜிட்டல் கைது என்று கூறி மிரட்டி பணம் பறித்ததாக 28 புகாா்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் ரூ. 68 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மா்ம நபா்கள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடா்பு கொள்கின்றனா். இந்த மோசடிகளில் ஈடுபடும் நபா்களை வங்கிக் கணக்கு விவரம் அடிப்படையில் முதல் கட்டமாக அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவா்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.