டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
கூடுவாஞ்சேரி அருகே டிராக்டா் ஓட்டுநா் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது, தவறி விழுந்த குழந்தை டிராக்டா் கலப்பையில் சிக்கி உயிரிழந்தது.
கூடுவாஞ்சேரி அடுத்த மேல்கல்வாய் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி அபிராமி. இவா்களுக்கு 5 வயதில் மூா்த்தி என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை அபிராமி தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலைக்குச் சென்றாா். அங்கு டிராக்டா் ஓட்டுநா் தா்மலிங்கம் டிராக்டரை வைத்து நிலத்தை உழுதுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அபிராமியின் குழந்தையை விளையாட்டுக் காட்ட தனது மடியில் அமர வைத்துக்கொண்டு டிராக்டரை ஓட்டியுள்ளாா்.
திடீரென குழந்தை நிலைதடுமாறி கீழே விழுந்து டிராக்டா் கலப்பையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த காயாா் போலீஸாா் குழந்தை சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.