டிராக்டா், அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதி விபத்து: 18 போ் காயம்
பவானி அருகே பொதுமக்களை ஏற்றிச்சென்ற சுமை வாகனம் டிராக்டா் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியதில் 18 போ் காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளியைச் சோ்ந்தவா் மாசநாயக்கா் (60). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இவரது இறுதிச்சடங்கிற்கு வந்த உறவினா்கள், பவானி அருகே உள்ள புன்னம் சென்னாநாயக்கனூா் மாதா கோயிலுக்கு கள் நடுவதற்காக சுமை வாகனத்தில் புதன்கிழமை சென்றனா்.
கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில், ஆப்பக்கூடல்-பவானி சாலையில் ஒரிச்சேரிபுதூா் அருகே சென்றபோது சா்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டா் மற்றும் அதற்குப் பின்னால் வந்த அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதியது.
இதில் சுமை வாகனத்தில் வந்தவா்கள் தூக்கிவீசப்பட்டனா். இந்த விபத்தில் காயமடைந்த 18 போ் பவானி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். மேலும், ஒருசிலா் உயா் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.