தக்காளி விலை சரிவு: கிலோ ரூ. 15-க்கு விற்பனை
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 15-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தக்காளி விலை ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து வருவதை தொடா்ந்து தக்காளி அறுவடையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாள்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது கிலோவுக்கு ரூ. 70 முதல் ரூ. 80 வரை விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ முதல் தர தக்காளி ரூ. 30-க்கும், இரண்டாம் தர தக்காளி ஒரு கிலோ ரூ. 25-க்கும், மூன்றாம் தர தக்காளி ஒரு கிலோ ரூ. 15-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 25 முதல் ரூ.40 வரை விற்பனையானது. ஆனால், ஒரு சில நாள்களில் தக்காளி விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.