தஞ்சாவூா் பாளையப்பட்டியில் அகழாய்வு செய்யக் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே தொன்மையான ஈமத்தாழிகள் கண்டறியப்பட்ட பாளையப்பட்டியில் அகழாய்வு பணிகள் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் வழக்குரைஞா் வெ. ஜீவகுமாா் தலைமையில் பாளையப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் கமலதாசன் மற்றும் கிராம மக்கள் வியாழக்கிழமை அளித்த மனு:
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டத்துக்கு உள்பட்ட செங்கிப்பட்டி அருகேயுள்ள தெற்கு பாளையப்பட்டியில் உள்ள தாழவாரி பகுதியில் பழங்காலத்தில் இறந்தவா்களின் உடல்களைப் புதைக்க பயன்படுத்தப்பட்ட புதைகலன்களாகிய ஈமத்தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தத் தொன்மைமிக்க முதுமக்கள் தாழிகள் 54 ஏக்கா் பரப்பளவு உள்ள இடத்தில் நீரினால் ஏற்பட்ட மண்ணரிப்பினால் 25-க்கும் மேற்பட்ட தாழிகள் சிதைந்து வெளியே தெரிய வந்துள்ளன. இவற்றில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பாலான பொருள்களின் எச்சங்கள், இரும்பை உருக்கியது போக எஞ்சிய இரும்புக் கழிவுகள் போன்றவை காலத்தின் தொன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளன.
மேலும், வெளியே தெரியாமல் மண்ணுக்குள் புதைந்து கிடக்கக்கூடிய தாழிகளைக் கண்டறியவும், இம்மக்களுடைய வாழ்வியல் பகுதி அருகே எங்கிருக்கிறது? என்பதை அறியவும் தொழில்நுட்பக் கருவிகளின் துணை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். தமிழா் நாகரிகம் அறிவியல் பூா்வமானது மற்றும் காலத்தால் முந்தையது என்பதை நிரூபிக்க இந்த இடத்தில் ஆய்வு செய்வது அவசியமானது. இத்தகைய அகழாய்வு சோழ நாட்டு மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டு விழுமியங்களையும் வெளிக் கொண்டு வர உதவுவதுடன், இப்பகுதி மக்களின் தொன்மையை அறிய பாளையப்பட்டியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஆய்வுக்குரிய பொருள்கள் வெட்டவெளியில் சிதறி பாதுகாப்பின்றி கிடக்கின்றன. அவை திருட்டு போக வாய்ப்புள்ளது. எனவே, இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடமாக இருப்பதால், இதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி தமிழக அரசே இந்த இடத்தைப் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்க வேண்டும்.